-->
அஸ்ஸலாமு அழைக்கும்! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!💝💟🌠🌙🌃🌈.... ஒவ்வொரு முஸ்லிம் ஆண் மற்றும் பெண் இருபாலாருக்கும் மார்க்க கல்வி அவசியம். அழகான முறையில் அறிந்து கொள்ள ! மற்றவர்களுக்கும் இதை தெரியப்படுத்தவும்!🌟🌍....

செவ்வாய், 22 நவம்பர், 2016

மஹ்ஷரில் மனிதனின் நிலை!👨🌐🌝 தொடர் 1

மஹ்ஷரில் மனிதனின் நிலை!👨🌐🌝 தொடர் 1
ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையைக் கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். மறுமை வாழ்க்கை என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்கு பல படித்தரங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மண்ணறை வாழ்க்கை, உலகம் அழிக்கப்படுதல், மீண்டும் எழுப்பப்படுதல், விசாரிக்கப்படுதல், கூலி வழங்கப்படுதல் என்று பல படித்தரங்கள் மறுமைக்கு இருக்கின்றன. ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்பட்டு மஹ்ஷர் எனும் வெட்டவெளி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தருணத்தில், மனிதர்கள் பல நிலைகளில் இருப்பார்கள். அப்போது அனைவருக்கும் பொதுவான நிலைகளும் இருக்கின்றன.

அடுத்ததாக, நல்லவர்களும் கெட்டவர்களும் இம்மை வாழ்க்கையில் தாங்கள் பெற்றிருந்த எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு ஏற்றவாறு சில வகையான தோற்றங்கள், நிலைகள் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அந்நாளில் மக்கள் பல நிலைகளைப் பெற்று பல பிரிவுகளாகப் பிரிந்து இருப்பார்கள். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் அறியலாம்.


எண்ணங்களுக்கு தகுந்தவாறு
அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காக பல பிரிவினர்களாக ஆவார்கள். அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.
(அல்குர்ஆன் 99:6-8)

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும்போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்” என்று கூறியதை நான் கேட்டேன்.
நூல்: முஸ்லிம் (5518)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு சமுதாயத்தின் மீது வேதனையை இறக்க அல்லாஹ் நாடிவிட்டால், அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்” என்று கூறியதை நான் கேட்டேன்.
நூல்: முஸ்லிம் (5519)

கேள்விக் கணக்கை எதிர்நோக்கியபடி மஹ்ஷரில் நின்று கொண்டிருக்கும் மக்களின் நிலைகள் மற்றும் அடையாளங்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்திருக்கும் செய்திகளை வரிசையாகத் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.
மனிதர்களின் பொதுவான நிலை

இந்த உலகத்தில் பிறக்கும் போது மனிதர்கள் எவ்வாறான நிலையில் இருக்கிறார்களோ அவ்வாறே அன்றைய நாளில் அனைவரும் இருப்பார்கள். ஆடை அணியாதவர்களாக, செருப்பு போடாதவர்களாக, விருத்தசேதனம் செய்யாதவர்களாக பரந்து விரிந்த நிலப்பரப்பில், பரிதவித்த நிலையில் நின்று கொண்டிருப்பார்கள். நம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள், இணை வைப்பவர்கள், நூதனவாதிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் இந்த நிலையில் தான் இருப்பார்கள். இவ்வாறு எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் எல்லா மக்களும் ஒன்று திரட்டப்பட்டிருப்பார்கள். இதற்குரிய ஆதாரங்களை இப்போது காண்போம்.
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
(அல்குர்ஆன் 21:104)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), “மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு “எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம்” எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு, “அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாüல் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் (5102)

கெட்ட மனிதர்களின் நிலை
பூமியில் வாழும் காலத்தில் நாமெல்லாம் ஓரிறைவனை ஏற்றுக் கொண்டு நல்ல காரியங்கள் செய்கிறோமா? தீய காரியங்கள் செய்கிறோமா? என்று சோதிப்பதற்காகவே அல்லாஹ் நம்மைப் படைத்திருக்கிறான். இதைத் தெரிந்தும் தெரியாமலும் பலர் தமக்கும் சமுதாயத்துக்கும் தீங்கு தரும் காரியங்களை தாராளமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறர் நலம் மறந்து, மறுத்து சுயநலத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களின் தவறான குணத்தாலும் காரியத்தாலும் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றியெல்லாம் கடுகளவும் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான மக்கள், இவ்வுலகில் தாங்கள் செய்த குற்றங்களுக்கு, பாவங்களுக்குத் தோதுவாக மறுமையில் சில வகையான நிலைகளில் நிறுத்தப்படுவார்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

இறைமறுப்பாளர்களின் நிலை
இறைவன் கொடுத்த பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாமல் அவனை மறுத்துக் கொண்டு வாழும் மக்கள் இருக்கிறார்கள். இதுபோன்று, இறைவன் இருப்பதாக நம்பினாலும் அவனைச் சரியான முறையில் நம்பிக்கை கொள்ளாமல் அவனுக்குரிய ஈடு இணையற்ற இடத்தில் மற்ற படைப்பினங்களை வைத்து அல்லது அவை இருக்கும் இழிவான நிலைக்கு இறைவனை தரம் தாழ்த்தி மகிழும் மக்கள் பலர் இருக்கிறார்கள்.
மறுமை நாளில் மஹ்ஷரில் இவர்களுக்கென்றே குறிப்பிட்ட சில வகையான நிலைகள் இருக்கின்றன. எங்கும் தப்பித்துச் செல்ல முடியாத அந்த நாளில் இவர்களின் முகமெல்லாம் கருத்து, புழுதிப் படிந்து, சோகமாக இருக்கும். என்ன நடக்கப் போகிறதோ? என்ற பீதியில் பதறியவர்களாக இவர்கள் இருப்பார்கள். தங்களது முகம் கவிழ்ந்த நிலையில் இறைவனிடம் இழுத்துச் செல்லப்படுவார்கள். இதற்குரிய ஆதாரங்களைக் காண்போம்.
அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள்.
(அல்குர்ஆன் 80:37-42)

அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும். “நம்பிக்கை கொண்ட பின் (ஏக இறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!” என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்).
(அல்குர்ஆன் 3:106, 107)

சில முகங்கள் அந்நாளில் சோக மயமாக இருக்கும். தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும். அவ்வாறில்லை! உயிர் தொண்டைக் குழியை அடைந்து விடும் போது “மந்திரிப்பவன் யார்?” எனக் கூறப்படும். “அதுவே பிரிவு” என்று அவன் விளங்கிக் கொள்வான். காலோடு கால் பின்னிக் கொள்ளும். அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான். பின்னர் தனது குடும்பத்தினருடன் கர்வமாகச் சென்றான்.
(அல்குர்ஆன் 75:22-33)

முகம் கவிழச் செய்து நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவோர் கெட்ட இடத்தில் தங்குவோராகவும், வழி கெட்டோராகவும் இருப்பார்கள்.
(அல்குர்ஆன் 25:34)

ஒருமனிதர் “அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாளில்  தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “இந்த உலகில் அவனை இரு கால்கüனால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில்  அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?” என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (4760)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக