உலக ஆசையா? சொர்க்க ஆசையா? தொடர் 1🌎🌉

உலக ஆசையா? சொர்க்க ஆசையா? தொடர் 1🌎🌉
அல்லாஹ் சிறந்த படைப்பாக மனிதப் படைப்பைப் படைத்து, மனிதனுடைய உள்ளங்கள் விரும்புகின்ற அளவிற்கு இவ்வுலக வாழ்க்கையில் (இன்பமாக இருப்பதற்கு) என்னற்ற அருட்கொடைகளை ஏற்படுத்தியுள்ளான். உலக இன்பங்களின் பல வகைகளை அல்லாஹ் பட்டியிலிடுகிறான்.

உலகத்தின் நிலை

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.
அல்குர்ஆன் 3:14

“விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 57:20


இவ்வுலகத்திலுள்ள இன்பங்களை மனிதன் விரும்பினாலும், இவ்வுலக வாழ்க்கைதான் நிம்மதியான வாழ்க்கை, நிரந்தரமான வாழ்க்கை என்று நினைத்து விட கூடாது என்பதற்காகவும், மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை நினைவூட்டவும் இவ்வுலகத்தை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

உலகத்தை அஞ்சுதல்
இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கும் இன்பங்கள், அருட்கொடைகள் அனைத்திலும் நமக்குச் சோதனைகள் இருக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிருந்தும், பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால் தான் ஏற்பட்டது.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம் 5292

நபி (ஸல்) அவர்களின் பயம்
பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை, “ஜிஸ்யா’ (காப்பு) வரி வசூலித்துக் கொண்டு வரும் படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களாயிருந்த) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்திருந்தார்கள்.
அபூஉபைதா (ரலி) அவர்கள் (வரி வசூலித்துக் கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்து விட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியாக ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தம் எண்ணத்தைச் சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, “அபூஉபைதா சிறிது நிதியுடன் பஹ்ரைனிலிருந்து வந்துவிட்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்றார்கள்.
அதற்கு அன்சாரிகள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை.
ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அ(ந்த உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), நூல் ; முஸ்லிம் 5668

இவ்வுலகத்தில் பொருளாதரம் அதிகமாக வழங்கப்பட்டால் நன்மைகளை செய்யாமல், மறுமையை மறந்து இவ்வுலக வாழ்க்கையில் மூழ்கியிருப்போம் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.
எந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அஞ்சினார்களோ அதைத்தான் மனிதன் அதிக அதிகமாக விரும்பக் கூடியவனாக இருக்கிறான்.
மனிதனின் விருப்பம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதியவரின் மனம் கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது: 1. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. 2. பொருளாசை.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் 1891)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும், மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். மனிதனின் வாயை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி 1894
உலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும்🌁🌃
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு” என்று சொன்னார்கள்.

என்னதான் செல்வத்தை அதிகமாகச் சேகரித்தாலும், ஒருவர் முழுமையாக அதனை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவன் மரணத்தைத் தழுவக் கூடியவன். இவ்வுலகம் நிரந்தரம் இல்லை, மறு உலகம் தான் நிரந்தரமானது என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வுலகம் நிறந்தரம் இல்லை
அகழ்ப் போரின்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து விட்டு, “இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; ஆகவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி), நூல் : புகாரி 6414

அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி, இவ்வுலக வாழ்க்கையில் அற்பமான பொருட்களை விரும்பாமல் மறுமையை நோக்கி முன்னோற கூடிய இறைநம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலையைப் போன்றது.

இறைநம்பிக்கையாளருக்கு இவ்வுலகம் சோதனை
இவ்வுலக வாழ்க்கை இறைநம்பிக்கையாளருக்கு ஒரு சிறைச்சாலை போன்றது. உலகத்தில் வாழும்போது இறைவன் கட்டளையிட்ட அனைத்து காரியங்களையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். தனது மனோயிச்சைகளுக்கு கட்டுப்பட்டு இறைவன் தடுத்த காரியங்களைச் செய்ய கூடாது. இவ்வாறு வாழ்ந்தால்தான் மறுமையில் இறைவன் தயார் செய்து வைத்துள்ள சொர்க்கத்தை அடைய முடியும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 5663

சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்றுதான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது.
இவ்வுலகத்தில் வாழும்போது சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுவோம். அந்த நேரங்களில் மார்க்கத்திற்கு முரணாக காரியங்களில் ஈடுபடக் கூடாது. சிரமங்களைச் சகித்துக்கொண்டால் நாம் மறுமையில் வெற்றி பெற முடியும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6487

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். அதன் நடுவிலிருந்து சதுரத்திற்கு வெளியே செல்லுமாறு ஒரு கோடு வரைந்தார்கள். பின்னர் நடுவிலுள்ள அந்தக் கோட்டின் ஓர் ஓரத்திலிருந்து (சதுரத்துடன் முடியும்) மறு ஓரம் வரை சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம்தான் அவனைச் “சூழ்ந்துள்ள’ அல்லது “சூழ்ந்து கொண்டுவிட்ட’ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி 6417

யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களுக்குப் பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகிறார்களா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான் என்பதை அறிய வேண்டும்.

தம்மைவிடக் கீழ் உள்ளவரைப் பார்க்க வேண்டும்
பல்வேறு சோதனைகளுக்கு நாம் உள்ளாக்கப்படும்போது, அதிலும் குறிப்பாக பொருளாதாரத்தில் சோதிக்கப்படும்போது நம்மைவிட உயர்ந்தவரைப் பார்க்காமல், நம்மைவிட தாழ்ந்தவரைப் பார்க்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6490

போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும்.
இவ்வுலகத்தில் வாழக்கூடிய அனைவரும் இன்பங்களுக்கு ஆசைப்படகூடியவர்கள்தான். ஆனால் இன்பங்களை அடையவேண்டுமென மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடாமல், இருப்பதை வைத்து, போதும் என்ற மனம் உள்ளவரே வெற்றி பெற்றவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1898
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : முஸ்லிம் 1903

நபிகளின் நிலை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் இறைத்தூதராக தேர்ந்தெடுத்த பிறகு தம்முடைய பொருளாதாரத்தையும், முதல் மனைவியான பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த அன்னை கதிஜா (ரலி) அவர்களிடத்தில் இருந்த பொருளாதாரத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள். அவர்கள் மரணத்தருவாயில் யூதர்களிடத்தில் அடகு வைத்த தனது கவசத்தை மீட்க முடியாமல் மரணித்தார்கள் என்ற செய்திகளையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையை விரும்பாமல், மறுமையில் கிடைக்கக் கூடிய இன்பங்களை எதிர்பார்த்த காரணத்தினால்தான் தன்னுடைய பொருளாதாரத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்துள்ளார்கள்.
உஹது மலை அளவு

நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்தபோது, “இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு, “(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தான் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; “(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : புகாரி 2388

நபி (ஸல்) அவர்களிடத்தில் யார் வந்து உதவி கேட்டாலும் தன்னிடத்தில் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருந்தார்கள். முடித்து வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன்.
ஆபூபக்கர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலிலி) அவர்கள் “முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி), நூல் : புகாரி 1472

கருத்துகள்