-->
அஸ்ஸலாமு அழைக்கும்! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!💝💟🌠🌙🌃🌈.... ஒவ்வொரு முஸ்லிம் ஆண் மற்றும் பெண் இருபாலாருக்கும் மார்க்க கல்வி அவசியம். அழகான முறையில் அறிந்து கொள்ள ! மற்றவர்களுக்கும் இதை தெரியப்படுத்தவும்!🌟🌍....

வியாழன், 24 நவம்பர், 2016

உலக ஆசையா? சொர்க்க ஆசையா ? தொடர் 2

உலக ஆசையா? சொர்க்க ஆசையா ? தொடர் 2
உலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும்🌁🌃
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு” என்று சொன்னார்கள்.

என்னதான் செல்வத்தை அதிகமாகச் சேகரித்தாலும், ஒருவர் முழுமையாக அதனை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவன் மரணத்தைத் தழுவக் கூடியவன். இவ்வுலகம் நிரந்தரம் இல்லை, மறு உலகம் தான் நிரந்தரமானது என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வுலகம் நிறந்தரம் இல்லை
அகழ்ப் போரின்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து விட்டு, “இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; ஆகவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி), நூல் : புகாரி 6414

அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி, இவ்வுலக வாழ்க்கையில் அற்பமான பொருட்களை விரும்பாமல் மறுமையை நோக்கி முன்னோற கூடிய இறைநம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலையைப் போன்றது.

இறைநம்பிக்கையாளருக்கு இவ்வுலகம் சோதனை
இவ்வுலக வாழ்க்கை இறைநம்பிக்கையாளருக்கு ஒரு சிறைச்சாலை போன்றது. உலகத்தில் வாழும்போது இறைவன் கட்டளையிட்ட அனைத்து காரியங்களையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். தனது மனோயிச்சைகளுக்கு கட்டுப்பட்டு இறைவன் தடுத்த காரியங்களைச் செய்ய கூடாது. இவ்வாறு வாழ்ந்தால்தான் மறுமையில் இறைவன் தயார் செய்து வைத்துள்ள சொர்க்கத்தை அடைய முடியும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 5663
சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்றுதான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது.
இவ்வுலகத்தில் வாழும்போது சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுவோம். அந்த நேரங்களில் மார்க்கத்திற்கு முரணாக காரியங்களில் ஈடுபடக் கூடாது. சிரமங்களைச் சகித்துக்கொண்டால் நாம் மறுமையில் வெற்றி பெற முடியும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6487

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். அதன் நடுவிலிருந்து சதுரத்திற்கு வெளியே செல்லுமாறு ஒரு கோடு வரைந்தார்கள். பின்னர் நடுவிலுள்ள அந்தக் கோட்டின் ஓர் ஓரத்திலிருந்து (சதுரத்துடன் முடியும்) மறு ஓரம் வரை சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம்தான் அவனைச் “சூழ்ந்துள்ள’ அல்லது “சூழ்ந்து கொண்டுவிட்ட’ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி 6417

யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களுக்குப் பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகிறார்களா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான் என்பதை அறிய வேண்டும்.

தம்மைவிடக் கீழ் உள்ளவரைப் பார்க்க வேண்டும்
பல்வேறு சோதனைகளுக்கு நாம் உள்ளாக்கப்படும்போது, அதிலும் குறிப்பாக பொருளாதாரத்தில் சோதிக்கப்படும்போது நம்மைவிட உயர்ந்தவரைப் பார்க்காமல், நம்மைவிட தாழ்ந்தவரைப் பார்க்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6490

போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும்.
இவ்வுலகத்தில் வாழக்கூடிய அனைவரும் இன்பங்களுக்கு ஆசைப்படகூடியவர்கள்தான். ஆனால் இன்பங்களை அடையவேண்டுமென மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடாமல், இருப்பதை வைத்து, போதும் என்ற மனம் உள்ளவரே வெற்றி பெற்றவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1898
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : முஸ்லிம் 1903

நபிகளின் நிலை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் இறைத்தூதராக தேர்ந்தெடுத்த பிறகு தம்முடைய பொருளாதாரத்தையும், முதல் மனைவியான பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த அன்னை கதிஜா (ரலி) அவர்களிடத்தில் இருந்த பொருளாதாரத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள். அவர்கள் மரணத்தருவாயில் யூதர்களிடத்தில் அடகு வைத்த தனது கவசத்தை மீட்க முடியாமல் மரணித்தார்கள் என்ற செய்திகளையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையை விரும்பாமல், மறுமையில் கிடைக்கக் கூடிய இன்பங்களை எதிர்பார்த்த காரணத்தினால்தான் தன்னுடைய பொருளாதாரத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்துள்ளார்கள்.
உஹது மலை அளவு

நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்தபோது, “இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு, “(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தான் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; “(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : புகாரி 2388

நபி (ஸல்) அவர்களிடத்தில் யார் வந்து உதவி கேட்டாலும் தன்னிடத்தில் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருந்தார்கள். முடித்து வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன்.
ஆபூபக்கர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலிலி) அவர்கள் “முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி), நூல் : புகாரி 1472

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக