-->
அஸ்ஸலாமு அழைக்கும்! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!💝💟🌠🌙🌃🌈.... ஒவ்வொரு முஸ்லிம் ஆண் மற்றும் பெண் இருபாலாருக்கும் மார்க்க கல்வி அவசியம். அழகான முறையில் அறிந்து கொள்ள ! மற்றவர்களுக்கும் இதை தெரியப்படுத்தவும்!🌟🌍....

வியாழன், 24 நவம்பர், 2016

உலக ஆசையா ? சொர்க்க ஆசையா ? தொடர் 3

உலக ஆசையா ? சொர்க்க ஆசையா ? தொடர் 3

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாருடைய நிலை🌈🌐
நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருக்கு போதுமான உணவுகளை வழங்க முடியமால் ஏழ்மை நிலையில் இருந்தார்கள். மறுமையிலுள்ள வாழ்வு தான் நிரந்தர வாழ்வு என்று அவர்கள் விரும்பிய காரணத்தால்தான் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அடுப்பு பற்றவைக்காமல் ஒரு மாதத்தைக் கழித்திருக்கிறோம். அப்போது பேரீச்சம் பழமும் தண்ணீருமே எங்கள் உணவாக இருந்தன.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 5688


நபி (ஸல்) அவர்கள் மனைவிக்குக் கூறிய அறிவுரை
நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் மனைவிமார்களுக்கும் மத்தியில் மனஸ்தாபம் ஏற்படும்போது ஒரு மாத காலம் அவர்களுடன் ஒன்று சோராமல் இருந்தார்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களை சந்திக்கும்போது உங்களுக்கு உலக வாழ்க்கை வேண்டுமா? மறுமை வாழ்க்கை வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி, நீங்கள் உலக வாழ்க்கை விரும்பினால் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை தயார் செய்துவிடுகிறோன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறும்போது ஆயிஷா (ரலி) அவர்களும், மற்ற மனைவிமார்களும் இவ்வுலக வாழ்க்கை விரும்பாமல், மறுமை வாழ்க்கையை தேர்வு செய்தார்கள் என்ற செய்தி பின்வரும் ஹதிஸின் மூலம் அறியலாம்.
(ஹதிஸின் சுருக்கம்)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : அப்போதுதான், (“நபி (ஸல்) அவர்களுடன் வாழ்வது, அல்லது அவர்களின் மண பந்தத்திலிருந்து விலகி விடுவது’ ஆகிய இரு விஷயங்கஜல்) நாங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடும் இறை வசனம் அருளப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய மனைவிமார்களில் முதலாவதாக என்னிடம் தொடங்கி, “உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கின்றேன்: நீ உன் தாய் தந்தையரிடம் (அதற்காக) அனுமதி வாங்கும்வரை அவசரப்படத் தேவையில்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், “என் தாய் தந்தையர் தங்களை விட்டுப் பிரிந்து வாழும் படி ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், “நபியே! நீங்கள் உங்கள் மனைவிமார்களிடம் கூறிவிடுங்கள்: “நீங்கள் உலக வாழ்வையும் அதன் அழகையும் விரும்புகிறீர்களென்றால் வாருங்கள். நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுவுலகையும் விரும்புகிறீர்கள் என்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான பிரதிபலனைத் தயார் செய்து வைத்துள்ளான்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். (ஆகவே, உங்கள் முடிவு என்ன?)” என்று கேட்டார்கள். நான், “இந்த விஷயத்திலா என் தாய் தந்தையரிடம் நான் அனுமதி கேட்பேன். நானோ அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுமை உலகையும்தான் விரும்புகின்றேன்” என்று கூறினேன். பிறகு, தம் மனைவிமார்கள் அனைவருக்கும் (“தம்முடன் வாழ்வது, தம்மை விட்டுப் பிரிந்து விடுவது’ ஆகிய இரண்டில்) விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கினார்கள். அவர்கள் அனைவருமே நான் சொன்னது போன்றே சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் ; புகாரி 2468

மேற்கூறப்பட்ட அனைத்து ஹதிஸ்களை நினைவில் கொண்டு, இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளுக்காக நாம் மறுமையை பாழாக்கிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் முஃமின்களுக்கு மறுமையை முன்னிறுத்தி உபதேசம் செய்கின்றான் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இவ்வுலகில் வாழ வேண்டும்.

இந்த உலகத்தில் வாழக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும் அவனுக்கென்று ஏதாவது நோக்கம் இருக்கும். எந்த மனிதனும் நோக்கம் இல்லாமல் வாழமாட்டான். குறிப்பாக இந்த இஸ்லாமிய சமுதாயத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கண்டிப்பாக நோக்கம் இருக்கும்.
நாம் எந்தவித நரகத்தினுடைய தீண்டுதலும் இல்லாமல் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற நோக்கம்தான் அது. எந்த முஸ்லிமும் சிறிது காலம் நரகத்தில் வேதனையை அனுபவித்துவிட்டு பிறகு சொர்க்கம் சென்று விடலாம் என்று நினைக்கக்கூட மாட்டோம். கேள்வி கணக்குகள் இருந்தாலும் அதை முடித்துவிட்டு சொர்க்கம் செல்லவே நாம் ஆசைப்படுவோம்.
இந்த சொர்க்கத்தை நாம் அடைவதற்கு இஸ்லாம் நமக்கு ஒரு சில கட்டளைகளை இடுகிறது.

நபி(ஸல்) அவர்கள் எந்தெந்த காரியங்களைச் செய்தால் உங்களுக்கு சொர்க்கத்தை நான் வாக்களிக்கிறேன் என்று சொன்னார்களோ அப்படிப்பட்ட சிறிய காரியங்களையும் செய்வதற்கு நாம் முன் வரவேண்டும். அந்த காரியங்க்ளைச் செய்ய வேண்டும் என்றால் முதலில் சொர்க்கத்தைப் பற்றிய செய்திகளை நாம் அறிந்து கொள்வது அவசிமாகும்.

சொர்க்கத்தின் இன்பங்கள் சொர்க்கத்தை விளங்குதல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், “இந்த உலகத்தில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமைநாளில் கொண்டுவரப்பட்டு சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உனக்கு ஏற்பட்டதா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒருபோதும் நான் சிரமத்தைக் கண்டதில்லை” என்று கூறுவார் என்றார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்(ரலி) நூல் : முஸ்லிம் 5407
சொர்க்கத்தை விளங்குவதற்காக இந்த சம்பவத்தை நமக்கு நபி(ஸல்) அவர்கள் சொல்லிக்காண்பிக்கிறார்கள்.

சொர்க்கத்தில் இடம் கிடைப்பது
இன்னும் இலகுவாக சொர்க்கம் என்பது நிலையானது என்றும் நமக்குப் புரிய வைக்கிறார்கள்.
“சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம்(கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : சஹ்ல் பின் சஅத்(ரலி) நூல் : புகாரீ 6415

இந்த உலகத்தில் 10சென்ட் வைத்திருப்பவர்கள்கூட இன்றைக்கு 50லட்சம் இன்னும் 5வருடத்தில் 1கோடி என்று மகிழ்ந்து ஆட்டம் போடுவதைப் பார்க்கிறோம். இரவெல்லாம் அதை நினைத்துக்கொண்டு தூங்காமல் சந்தோசத்தில் மிதப்பதைப் பார்க்கிறோம். இதெல்லாம் இருந்து எத்தனை நாட்களுக்கு ஆடுவார்கள்? தமது வீட்டில் ஆசை ஆசையாக வாங்கிய ஏசி இருக்கும். அதை அனுபவிக்க இவர்கள் இருப்பார்களா?
ஆனால் மறுமையில் ஒரு சாட்டை வைக்கக்கூடிய அளவு இடம் கிடைப்பது என்பது இந்த பூமியும் அதில் உள்ளவற்றில் உள்ள அனைத்தையும்விட சிறந்தது என்றால் அந்த சொர்க்க வாழ்க்கைக்கு அழிவே கிடையாது என்பதுதான் இதன் அர்த்தம்.

சொர்க்கத்தின் பிரம்மாண்டம்
சொர்க்கத்தில் இருக்கக்கூடிய இடங்களை நாம் யோசித்து பார்த்தால் அது போன்று இடங்களெல்லாம் இருக்குமா என்று நாம் கேட்கும் அளவிற்கு அதன் பிரம்மாண்டத்தை நமக்கு நபி(ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.
“சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூசயீத்(ரலி)
நூல் : புகாரீ 6553

ஒரு வருடமல்ல, இரண்டு வருடமல்ல. வேகமாக ஓடக்கூடிய குதிரை நூறு வருடங்கள் ஓடினாலும் அதன் நிழலைக்கூட கடக்க முடியாது என்றால் சொர்க்கம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த உலகத்தில் அதிகபட்சம் ஐநூறு நபர்கள் உட்காரும் அளவிற்கு கூட ஒரு மரத்தை காண்பது அரிது. ஆனால் சொர்க்கம் அப்படிப்பட்டது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேட்டதெல்லாம் கிடைக்கும்
இந்த உலகத்தில் நாம் நினைத்த எதுவும் நடக்கவில்லை, நாம் நினைத்த எதுவும் நமக்கு கிடைக்கவில்லை என்று புலம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்ன தேவையோ, அதெல்லாம் அந்த சொர்க்கவாசிகளுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
“அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு”.
அல்குர்ஆன் 25:17

என்ன கேட்டாலும் நமக்கு அங்கே கிடைக்கும் என்பதை அல்லாஹ் கூறுகிறான். இதற்காக அந்த சொர்க்கத்திற்கு நாம் ஆசைப்பட வேண்டும்.

முதல் உணவு
ஒரு சந்தோஷமான காரியம் நடக்கிறது என்றால் அதில் முதல் காரியம் எதுவாக இருக்குமோ அதை நினைவில் வைத்துக்கொள்ள அனைவரும் ஆர்வமாக இருப்போம். அது போன்றே சொர்க்கவாசிகள் முதன் முதலில் சாப்பிடக்கூடிய உணவும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
“சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல் : புகாரி 4480

இளமை இளமை

சொர்க்கத்தில் எந்த ஒரு மனிதனுக்கும் இளமை அழியவே அழியாது. என்றும் இளமையோடு இருக்கும் இடமாக சொர்க்கம் இருக்கும் என்பதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் காண்பிக்கிறார்கள்.
“அவரது இளமை அழிந்துபோகாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5456

இந்த உலகத்தில் போன வருடம் எடுத்த புகைப்படத்தைக் கூட நாம் இப்போது பார்க்க இயலாது. நாம்தானா என்ற சந்தேகம் கூட நமக்கு வரும். போன வருடம் உடல் பருமன் இருந்திருக்கும். ஆனால் இந்த வருடம் உடல் மெலிந்து போய் இருக்கும். கேட்டால் சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று பதில் கூறுவதைப் பார்க்கிறோம். எனவே இந்த உலகத்தில் நமது இளமை மாறிக்கொண்டே செல்கிறது. அடையாளம் தெரியாத அளவிற்கு செல்கிறது. தலைமுடிகள் உதிர்வதையும், அதன் நிறங்கள் மாறுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அதைத் திரும்பப் பெறவே இயலாது என்பதே இந்த உலக வாழ்க்கை. ஆனால் இளமை மாறாமல் சொர்க்கவாசிகள் இருப்பார்கள்.

நோய் இல்லை
சொர்க்க வாழ்க்கையை அனுபவிக்கும்போது எந்தத் தடையும் வரக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் நோயில்லாத சொர்க்க வாழ்க்கையை சொர்க்கவாசிகளுக்கு தந்திருக்கிறான்.
“மூக்கு சிந்தமாட்டார்கள். சளி துப்பவும் மாட்டார்கள்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 5451
இந்த உலகத்தில் ஏதேனும் பெரிய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இந்த சிறிய நோய்கள்தான் காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜலதோஷம்தான் பெரும்பங்கு வகிக்கிறது. ஜலதோஷம் பிடித்துவிட்டால் எந்த வேலையும் மனிதனுக்கு செய்ய முடிவது கிடையாது. மிகவும் சிரமப்படக்கூடிய நிலைமையை அடைகின்றனர். ஆனால் சொர்க்கத்தில் இது போன்ற எந்த பிரச்சனையும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லுகிறார்கள்.

சொர்க்கவாசிகளின் துணைகள்
சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கின்ற அந்தத் துணைகளை நாம் சிந்தித்துப்பார்த்தால் இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் அழகா என்று கேட்கக்கூடிய நிலைமை வரும்.
“அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.”
அல்குர்ஆன் 55:56

மற்றொரு வசனத்தில்,
“மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.” அல்குர்ஆன் 56:23
என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த உலகத்தில் யாரையாவது முத்துக்களைப் போன்று இருக்கிறார்கள் என்று சொல்ல இயலுமா? கண்டிப்பாக சொல்ல இயலாது. இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,
“சொர்க்கத்தின் மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால் வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும்.”
அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: புகாரி 6568

நம்முடைய வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருட்டில் தீப்பெட்டி எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருப்போம். வீட்டில் கணவன், மனைவி இருந்தாலும் அவர்களின் முகத்தில் வெளிச்சம் கிடைக்குமா என்ன? அவர்கள் அருகில் இருந்தாலும் கூட பார்க்கவே இயலாதே. ஆனால் சொர்க்கத்தில் இருக்கும் ஒரு பெண் எட்டிப்பார்த்தால் வானம், பூமியெல்லாம் மின்னக்கூடிய வகையில் இருக்குமென்றால் அவர்களை எந்த அளவு அழகாக அல்லாஹ் படைத்திருப்பான் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்னும் சொல்வதாகயிருந்தால் சொர்க்கவாசிகளுக்கு அழகு கூடிக்கொண்டேதான் இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
“சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக்காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடைகளிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப் போடும். உடனே அவர்கள் மென்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள். அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர்.
அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 5448

எனவே சொர்க்கவாசிகளின் அழகும் பொலிவும் கூடிக்கொண்டே போகும். அவர்களின் அழகு குறையாது என்பதை மேலுள்ள செய்தி மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம்.

இப்படி சொர்க்கத்தைப் பற்றி எந்த விஷயத்தை நாம் பேசினாலும் அதனை முழுமையாக உணரவும் முடியாது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொர்க்கத்தைப் பற்றி நமக்கு அறிவித்தது கொஞ்சம் தான்.
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்ததுள்ளது சொற்பமே! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 5439

எனவே சொர்க்கத்தைப் பற்றி அதிகமாக நினைத்து இந்த உலக வாழ்வில் அல்லாஹ்வை மறந்துவிடாமல் கடமைகளை நாம் செய்ய வேண்டும்.
நபிகளாரின் பிரச்சாரத்திலும் இதுபோன்ற அணுகுமுறை இருந்ததை திருக்குர்ஆன் உறுதி செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக