-->
அஸ்ஸலாமு அழைக்கும்! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!💝💟🌠🌙🌃🌈.... ஒவ்வொரு முஸ்லிம் ஆண் மற்றும் பெண் இருபாலாருக்கும் மார்க்க கல்வி அவசியம். அழகான முறையில் அறிந்து கொள்ள ! மற்றவர்களுக்கும் இதை தெரியப்படுத்தவும்!🌟🌍....

சனி, 26 நவம்பர், 2016

தீய நண்பன் அமைந்தால்...

தீய நண்பன் அமைந்தால்...
நல்ல நண்பனைத் தேர்வு செய்யாமல் தீய நண்பனை நாம் தேர்வு செய்துவிட்டால் நம்முடைய நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.
தீயதை ஏவுதல், பகைமையை ஊட்டுதல், ஒழுக்கங்கெட்ட செயல்பாடுகளுக்கு அழைத்துச்செல்லுதல் இன்னும் மார்க்கத்திற்கு முரணான பிற விஷயங்களில் கொண்டு சென்று அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்றுவிடுவான்.
அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவ னிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்! 
(நூல் : புகாரி 2101)


நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கைகளை மூடிக் கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான். நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 9:67)

இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை மீண்டும் செய்கின்றனர்.
பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும் போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம். நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இரகசியம் பேசினால் பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவை குறித்து இரகசியம் பேசாதீர்கள்! நன்மை மற்றும் இறையச்சத்தை இரகசியமாகப் பேசுங்கள். யாரிடம் ஒன்று திரட்டப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள் !
(அல்குர்ஆன் 58 : 8, 9)

கெட்ட தோழமை நரகத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
கெட்ட நண்பர்கள் தீய செயல்களின் பக்கம் அழைத்துச் சென்று மார்க்கக் கடமைகளை செய்வதையும் விட்டும் தடுத்து விடுவார்கள்.”எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது நாம் கூ-லி கொடுக்கப்படுவோமா?” என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார். நீங்கள் (அவனை) எட்டிப் பார்க்கிறீர்களா என்று (இறைவன்) கேட்பான். அவர் எட்டிப் பார்க்கும் போது அவனை நரகின் மத்தியில் காண்பார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னைக் குழியில் தள்ள முயன்றாய்” என்று அவர் (நரகவாசியிடம்) கூறுவார்.
(அல்குர்ஆன் 37:51-56)

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதி வந்தோம்.
(அல்குர்ஆன் 74:40-46)

அளவு கடந்து புகழ்வான்
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உமக்கு நாசம்தான்! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே” என்று பலமுறை கூறினார்கள்.
பிறகு, “உங்களில் ஒருவர் தம் நண்பரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், “இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்’ என்று (மட்டும்) கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரைப் பற்றி இன்னின்னவாறு கருதுகிறேன் என்றுகூட, அவர் அவ்வாறு இருக்கிறார் என அறிந்தால் மட்டுமே கூறட்டும்.
அறிவிப்பவர் : அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 5727

அபூமஅமர் அப்துல்லாஹ் பின் சக்பரா அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் எழுந்து தலைவர்களில் ஒருவரைப் புகழ்ந்து பேசினார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ர-லி) அவர்கள், (புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த) மனிதரின் மீது மண்ணை அள்ளி வீசலானார்கள். மேலும், “அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசுபவரின் முகங்களில் மண்ணை அள்ளி வீசுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்” என்று கூறினார்கள்.
(நூல் :முஸ்லிம் 5730)

தீய நண்பன் பரம்பரை பெருமை பேசுவான்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவையாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது. ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதி-லிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.
(நூல் :முஸ்லிம் 1700)

மக்களை கேவலமாக பார்ப்பான்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-லி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள்.
(முஸ்லிம் 147)

குழப்பத்தை ஏற்படுத்துவான்
அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).
(அல்குர்ஆன் 28:77)

வீண்விரயம் செய்வான்
தேவையற்ற செலவுகள் செய்து வீண்விரயம் செய்பவர்களை தோழர்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 17:14)
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங் காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
(அல்குர்ஆன் 7:31)

அவதூறு கூறுவான்
தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான். (அல்குர்ஆன் 4:112)
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.
(அல்குர்ஆன் 33:58)
இது போன்ற தீய பண்புகளை சுமக்கும் கெட்ட நண்பனை தேர்வு செய்யாமல், நல்ல நண்பர்களைப் பெற்று, நன்மைகளை செய்து மரணிக்கிற நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!
ஜீனத் நிஸா, ஆசிரியை, அல்இர்ஷாத் கல்வியகம், மேலப்பாளையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக