தொழுகையும் அழுகையும் 🌂☔

குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முயல்வோமாக! குர்ஆன் வசனங்களை ஓதத் தெரிந்தவர் அதன் வசனங்களை மனனம் செய்து கொள்வோமாக! குர்ஆனை மனனம் செய்தவர் அதைப் பொருளுடன் ஓதக் கற்றுக் கொள்வோமாக!
தான் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
🌂☔
அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.
அல்குர்ஆன் 39:23

குர்ஆன் ஓதும் போது, அல்லது ஓதக் கேட்கும் போது மேனி சிலிர்க்க வேண்டும் என்று இறைவன் கூறுகின்றான். இந்தத் தாக்கத்தை நாம் பெற்றிருக்கிறோமா?
அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது.
அல்குர்ஆன் 17:109


குர்ஆனைக் கேட்கும் போது இத்தகைய பாதிப்பையும் நாம் உணர வேண்டும்.
நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
அல்குர்ஆன் 8:2

அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலை நாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுவர்.
அல்குர்ஆன் 22:35

குர்ஆனை ஓதும் போது அல்லாஹ்வின் அச்சத்தால் நமது உள்ளம் நடுங்க வேண்டும். ஈமான் அதிகரிக்க வேண்டும்; அந்த ஈமான் அதிகரித்ததற்கு அடையாளம் நமது கண்கள் நனைவதாகும்.
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 5:83

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். நான், “உங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். “(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?” எனும் (4:41வது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் “நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 4582

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணீர் வடிப்பதை நாம் இங்கு பார்க்கிறோம். நபியவர்களைப் போன்று தான் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்குர்ஆன் வசனங்களில் ஈடுபாடு கொண்டு கண்ணீர் வடிப்பார்கள். இதன் காரணமாகவே நபி (ஸல்) அவர்களின் மரண வேளையின் போது, அபூபக்ர் (ரலி)யைத் தொழுவிக்கும்படி ஏவுகையில் ஆயிஷா (ரலி) மறுக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது. “மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூபக்ரிடம் கூறுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு, “அபூபக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால் அவர்கள் அழுவதன் காரணத்தால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே உமர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். மேலும் “அபூபக்ர் (ரலி) உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே தொழுகை நடத்தும் படி உமருக்குக் கட்டளையிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹஃப்ஸா (ரலி) இடம் கூறினேன். அவர்களிடம் கூறிய போது. “நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்கள் கூட்டத்தைப் போன்றவர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் கூறுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) என்னிடம் “உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 716

அழுதவருக்கு அர்ஷின் நிழல்
இறைவனை நினைத்து, தனிமையில் அழுபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் நிற்கும் பாக்கியத்தைப் பரிசாக அளிக்கின்றான்.
“அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான்.
1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன். 4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர். 5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர். 6. அந்தஸ்தும், அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்” என்று கூறியவர். 7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6806

எனவே இப்படிப்பட்ட தன்மையைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக, குர்ஆன் ஓதும் போது நமக்கு அழுகை வர வேண்டும் என்றால் அதன் அர்த்தம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
குர்ஆனைப் பொருள் தெரிந்து ஓத ஆரம்பித்தால் அதுவே நம்முடைய உள்ளத்தை உருகவும், கண்களில் கண்ணீரைப் பெருகவும் செய்து விடும். எனவே குர்ஆன் விரும்புகின்ற இந்த அழகிய பண்புகளைப் பெறுகின்ற நல்லடியார்களாக நாமும் ஆக முயற்சிப்போமாக!

கருத்துகள்